Saturday, February 7, 2015

பேய் இருக்கா இல்லையா


நமக்கு பேய் என்றால் சின்ன வயசுல இருந்தே கொலை பயம்ன்னு சொல்லலாம்! பத்தாவது படிக்கும் வரை இருட்டாக இருக்கும் படிக்கட்டில் ராத்திரி 8 மணிக்கு மேல இறங்க சொன்ன அலறி அடித்து ஓடி விடுவேன், போயே தீர வேண்டிய நிலை வரும்போது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி விட்டு வருவேன். இன்னும் பின்னோக்கி சென்றால் சிறு வயதில் வீட்டில் என் மாமா அருகில் அமர்ந்து சைல்ட் ப்ளே (Childs Play) படம் பார்த்து விட்டு இரவு 11 மணிக்கு படுக்கும்போது எனக்கு பயமா இருக்கு, தூங்குறதுக்கு முன்னாடி எதாச்சும் காமெடி போடுங்க பாத்துட்டு தூங்குறேன்னு அடம் புடிக்க அப்புறம் என் மாமா சமாதானப்படுத்தி தூங்க வைத்த கூத்தெல்லாம் நடந்துள்ளது. பத்து படித்து முடித்த பிறகுதான் ராஜேஷ் குமார் ,சுபா  நாவல்களை அதிகமாய் படிக்க ஆரம்பித்தேன், பெரிதாய் பேய் கதைகள் இல்லாவிடினும் பயம் கொள்ளும் விதமாக கதைகள் இருக்கும், சில சமயங்கள் நமது பலவீனங்களை பலமாய் மாற்றுவது புது உத்வேகத்தை தரும் அது ஒரு சுகமும் கூட, மெதுவாக இந்திரா சௌந்தர்ராஜன் புத்தங்களையும் எங்கு பேய் கதை கிடைத்தாலும் தேடி படிப்பது, பர்மா பஜார் சென்று ஈவில் டெட் (evil  dead) படம் வாங்கி வந்து இரவு 12 மணிக்கு போட்டு பார்ப்பது என பல விஷப்பரிட்சைகள் மூலம் ஓரளவு என் இருட்டு பயங்களும் பேய் பயங்களும் பெரும் அளவு குறைந்தது. அப்புறம் நைட் ஷிப்ட் வேலைகளும் அதற்கு உதவின சிறிது மாதங்களுக்கு முன்பு வரை நன்றாகவே பொய் கொண்டு இருந்தது. 


சில மாதங்களுக்கு முன்பு Insidious chapter 2 படம் நானும் எனது நண்பனும் நைட் ஷோ பார்த்து விட்டு வரும்போது அவன் வீட்டுக்கு பயந்து பயந்து செல்லும்போதும் நான் தைரியமாகத்தான் வீடு சேர்ந்து தனியே உறங்கியும் போனேன். இது நடந்து ஒரு மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு வரவேற்பறையில் தனியாக படுத்து grown up  படம் பார்த்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தேன், இரவு ஒரு 2:30 மணி இருக்கும் சோர்வாக இருப்பதால் உறங்க செல்லலாம் என தொலைகாட்சியை அனைத்து விட்டு என் படுக்கை அறைக்கு சென்றேன், என் பெற்றோர்கள் உள் அறையில் படுத்து கொள்வார்கள். என் அறை அக்மார்க் கல்யாணம்  ஆகாத பையனின் அறையை போன்று இருக்கும் பொருட்கள் என் மெத்தை மேல் சிதறி கிடக்க நான் தரையில் பாய் விரித்து படுத்து கொள்வேன், தைரியசாலியை மாறியதில் இருந்து விளக்கை  எரிய விட்டால் தூக்கம் சரியாக வராது அதனால் கும்மிருட்டில்தான் பெரும்பாலும் தூக்கம்,



அன்று வழக்கம் போல விளக்கை  அணைத்து விட்டு படுத்த பிறகுதான் கனவுகள் வர ஆரம்பித்தன. இது வரை பார்த்த அனைத்து பேய் படங்களும் கதைகளும் ஓடின அதில் நான் ஒரு   கதாபாத்திரமாய் வேறு வந்து தொலைத்தேன், பேய் கனவுகள் வருவது எனக்கு ஒன்றும் புதிது இல்லை அவ்வப்போது வரும் போகும் பிறகு தூங்கி எழுந்து பார்க்கும்போது சிரித்து கொள்வேன் அவ்வளவே, எதோ ஒரு பேயின் முதுகில் சவாரி செய்தேன் செய்தேன், எதோ ஒரு பேய் என்னை துரத்தியது ரத்தம் சொட்ட சொட்ட ஓடி வந்தது, தலை தெறிக்க ஓடினேன், அப்புறம் ஏதோ ஒரு கட்டி முடிக்காத கட்டிடத்தில் முடியை விரித்து போட்டு ஆங்கில பேய் படங்களில் வரும் ட்ரேட் மார்க் கவுன் அணிந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கையில் திடீரென என் வீட்டு காலியான வரவேற்பறை கடந்து மூடிய என் படுக்கை அறைக்குள் நான் அதே உடை அணிந்து அதே நிலையில் தூங்கி கொண்டிருக்கின்றேன். ஒரு காய் நீண்டு என் கழுத்தை சுற்றி வளைக்கின்றது நான் திடிக்கிட்டு விழித்து பார்க்கையில் என்  தலைக்கு மேல ஒரு கருப்பு தலை நான்கு அடி நீள கூந்தல்  என் தலையணை தாண்டி விரிந்து கிடக்கிறது. என்னை அறியாமல் நான் யாருன்னு பயத்தில் கேக்க,, "நான்தான்ன்னன்" அப்படின்னு ஒரு பெண் அசிரீரி குரலில் சொல்லிவிட்டு என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்து விட்டது.. என் கண்கள் திறந்திருக்க வாய் காப்பாற்றுங்கள் என்று கத்த சத்தமே வரவில்லை கை கால்களை அசைக்க முடியவில்லை துடித்து கொண்டிருக்கையில் தூக்கம் கலைந்து பார்க்கையில் அதே இடத்தில் கழுத்தில் கை வைத்து கொண்டு நான் படுத்திருக்க நாவும் தொண்டையும் வறண்டு போய்.. வந்தது கனவா இல்லை உண்மையாக நடந்ததா என குழம்பி பொய் நேராக சாமி அறை சென்று விபூதி பட்டை அடித்து விட்டு வந்து என் படுக்கை அறையில் அமர்ந்தேன்.. மணி பார்த்தேன் அதிகாலை 4 மணி,  மனதை தேற்ற பாட்டு கேக்கலாமா என்று யோசித்தேன் பிறகுதான் பார்த்த பேய் படங்கள் அனைத்தும் நியாபகம் வந்தது போற பேய நாமலே ஏன் பாட்டு போட்டு வர வைக்கனும் என்று அப்படியே தூங்கலாம் என்று தலையணையில் சாய்ந்தேன், கண் மூடி படுத்தேன் மறுபடியும் யாரோ என் முதுகில் கை வைத்தது போல ஒரு உணர்வு அவ்வளவுதான் சடாரென்று எழுந்து உட்காந்திருந்தேன்.. இவ்வளவு நடந்த பின்னரும் எவனுக்கு தூக்கம் வரும்.. அவ்வளவுதான் அப்படியே மடி கணினியை விரித்து வைத்து அலுவலக பணியை செய்ய துவங்கி அதிலேயே மூழ்கியும் போனேன். 

காலையில் எழுந்த உடனே முதல் வேலையாக எனது அறையை சுத்தம் செய்தேன்.அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர ஒரு வாரம் ஆனது. 


பின்பு இணையத்தில் செய்த ஆய்வில் அது துயில் வாதம் (sleep paralysis) என்றும் ஒரு வகை புவிஈர்ப்பால் வருவது என்றும் தெரிந்தது, அறிவியலில் ஆயிரம் விளக்கம் குடுத்தாலும்.. அனுபவிக்கையில் மரண பீதி அடையும் நமக்கும்தான் தெரியும்.. 

இப்போவும் நான் தைரியசாலிதான்! ஆனால் பேய் படங்கள் பார்ப்பதற்கு முன் அறையை சுத்தம் செய்ய பழகி கொண்டேன்.... !

பயந்த சாமானியன் மனோஜ் (எ) தைரியசாலி

No comments:

Post a Comment