Saturday, February 14, 2015

"காதலர் தின வாழ்த்துக்கள்"ஒரு அழகான இளவேனிற்காலம்!

பச்சை பசேல் என அடர்ந்த கானகம்!
குயில்கள் கானம் இசைக்க,
ஊனுண்ணிகள் எங்கோ காணாமல் போயிருக்கும் போல!
மான்களும் மந்திகளும் ஆனந்தமாய் கூத்தாடின!

சிறு சிறு கொண்டை வைத்த வண்ண மயில்கள்,
தோகை விரித்து அழகாய் ஆடி எனக்கு வழிகாட்டின,
சிட்டு குருவிகள் தன் வெல்வெட் சிறகை
படபடவென அடித்து என்னை வரவேற்றன!

எங்கும் பசுமை! எல்லாம் இளமை! ரசிக்கும் தனிமை!

ரசித்து கொண்டே வெண்பச்சை பாசி கம்பளம் விரித்த தரைபரப்பில் சுகமாய் நடந்தேன்!
சற்று முன்னர் பெய்த மழை புல் பூண்டு மரம் கலந்து
சுகந்தமாய் ஒரு மணம் எழுப்பி என் நாசியை சுகிக்க செய்தது!

பச்சை விரிப்பில் பாதரசமாய் வழிந்தோடிய ஓடை தண்ணீர்
தாகமே இல்லை எனினும் அருந்த அரிதாய் அழைத்தது!

விலங்காய் நினைத்து நாவினில் அருந்தினேன் தெளிந்த நீரினை
நாத்திகர்களை கூப்பிட்டு அமிர்தம் உண்மைதான்
என தொண்டை கிழிய வாதம் புரிய தோன்றியது!

அமிர்தம் உண்ட வேகத்தில் வேகமாய் எட்டு வைத்தேன்!
அங்கே அழகாய் ஒரு மாளிகை கண்டேன்!

எட்டடுக்கு மாடி இல்லை, தங்கம் இல்லை வைரம் இல்லை!
மரமும் செடியும் புதர்களும் சேர்த்து
இயற்கை அன்னை அழகாய் செய்த மாளிகை அது!


கையில் பழங்களுடன் துடுக்காய் நடந்து வர!
மாளிகையின் மேற்படியில்! ஒய்யாரமாய் ஒரு உருவம்!


இவ்வளவு அழகையும் கானகத்தில் கண்டு சொக்கி போயிருந்தாலும்!
அந்த ஒய்யார உருவத்தை கண்டதும்
மயக்கமே கொள்ள செய்யும் பேரழகி அவள்!

வண்ண பூச்சுகள் இன்றி தெளிவாய் ஒரு முகம்!
ஆபரணங்கள் இன்றி ஜொலிக்கும் அவள் மேனி!
உதிர்ந்த மயில் தோகையை வைத்து செய்த ஆடையில்!
இயற்கை அன்னை கடைந்தெடுத்த வெண்ணெய் முத்தாய் அவள் நின்றாள்!
என் அவள் நின்றாள்!

என் உருவம் தெரிந்தவுடன் உன் விழிகள் காட்டும் பூரிப்பையும்!
என்னை நோக்கி ஓடி வரும் பிஞ்சு பாதத்தையும்!

என்னவென்று நான் சொல்வேன்! அந்த மயில் ஆட்டம் உன்னை விஞ்சவில்லையே!

பிஞ்சு குழந்தை புன்னகை கொண்ட கொஞ்சும் குமரி
உன்னை இமைக்காமல் பார்த்து நின்றேன்!

அருகில் வந்தாய் அழகாய் அளவாய் விரல் கோர்த்தாய்!
பயணம் எப்படி அன்பே உன் செவ்விதழ் திறந்து வார்த்தை உதிர்த்தாய்!
அப்பப்பா குயிலும் தோற்றுதான் போனது உன் தேன் தோய்ந்த குரலிசையில்!
நான் காதலில் விழுந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை!

இவ்வளவு அழகும் கொண்டு! எனக்கே எனக்கென்று நீ!
 எந்தன் அருகில் நிற்க அமைந்த வாழ்க்கை!

இத்தனையும் மனதில் கொண்டு உன்னை மோக விழியில் பார்த்திடவே!

கண் இமை படபடப்பில் சிட்டுக்குருவியின் வெல்வெட் இறகை வென்று முடித்து! நாணத்தில் நாணலை போல என் தோள்களின் மீதி தலை சாய்ந்தாய்!

காதலுடன் குழப்பமும் வந்தது இந்த காதலனுக்கு!

என் காதலி போல் எந்த கானகமும் ஏன் சிறப்பாய் இல்லை!

                                                "காதலர் தின வாழ்த்துக்கள்"

பின் குறிப்பு: முழுக்க முழுக்க கற்பனையே, நோ கிராஸ் கோச்டீன்ஸ்

காதலுடன் மனோஜ்

Saturday, February 7, 2015

பேய் இருக்கா இல்லையா


நமக்கு பேய் என்றால் சின்ன வயசுல இருந்தே கொலை பயம்ன்னு சொல்லலாம்! பத்தாவது படிக்கும் வரை இருட்டாக இருக்கும் படிக்கட்டில் ராத்திரி 8 மணிக்கு மேல இறங்க சொன்ன அலறி அடித்து ஓடி விடுவேன், போயே தீர வேண்டிய நிலை வரும்போது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி விட்டு வருவேன். இன்னும் பின்னோக்கி சென்றால் சிறு வயதில் வீட்டில் என் மாமா அருகில் அமர்ந்து சைல்ட் ப்ளே (Childs Play) படம் பார்த்து விட்டு இரவு 11 மணிக்கு படுக்கும்போது எனக்கு பயமா இருக்கு, தூங்குறதுக்கு முன்னாடி எதாச்சும் காமெடி போடுங்க பாத்துட்டு தூங்குறேன்னு அடம் புடிக்க அப்புறம் என் மாமா சமாதானப்படுத்தி தூங்க வைத்த கூத்தெல்லாம் நடந்துள்ளது. பத்து படித்து முடித்த பிறகுதான் ராஜேஷ் குமார் ,சுபா  நாவல்களை அதிகமாய் படிக்க ஆரம்பித்தேன், பெரிதாய் பேய் கதைகள் இல்லாவிடினும் பயம் கொள்ளும் விதமாக கதைகள் இருக்கும், சில சமயங்கள் நமது பலவீனங்களை பலமாய் மாற்றுவது புது உத்வேகத்தை தரும் அது ஒரு சுகமும் கூட, மெதுவாக இந்திரா சௌந்தர்ராஜன் புத்தங்களையும் எங்கு பேய் கதை கிடைத்தாலும் தேடி படிப்பது, பர்மா பஜார் சென்று ஈவில் டெட் (evil  dead) படம் வாங்கி வந்து இரவு 12 மணிக்கு போட்டு பார்ப்பது என பல விஷப்பரிட்சைகள் மூலம் ஓரளவு என் இருட்டு பயங்களும் பேய் பயங்களும் பெரும் அளவு குறைந்தது. அப்புறம் நைட் ஷிப்ட் வேலைகளும் அதற்கு உதவின சிறிது மாதங்களுக்கு முன்பு வரை நன்றாகவே பொய் கொண்டு இருந்தது. 


சில மாதங்களுக்கு முன்பு Insidious chapter 2 படம் நானும் எனது நண்பனும் நைட் ஷோ பார்த்து விட்டு வரும்போது அவன் வீட்டுக்கு பயந்து பயந்து செல்லும்போதும் நான் தைரியமாகத்தான் வீடு சேர்ந்து தனியே உறங்கியும் போனேன். இது நடந்து ஒரு மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு வரவேற்பறையில் தனியாக படுத்து grown up  படம் பார்த்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தேன், இரவு ஒரு 2:30 மணி இருக்கும் சோர்வாக இருப்பதால் உறங்க செல்லலாம் என தொலைகாட்சியை அனைத்து விட்டு என் படுக்கை அறைக்கு சென்றேன், என் பெற்றோர்கள் உள் அறையில் படுத்து கொள்வார்கள். என் அறை அக்மார்க் கல்யாணம்  ஆகாத பையனின் அறையை போன்று இருக்கும் பொருட்கள் என் மெத்தை மேல் சிதறி கிடக்க நான் தரையில் பாய் விரித்து படுத்து கொள்வேன், தைரியசாலியை மாறியதில் இருந்து விளக்கை  எரிய விட்டால் தூக்கம் சரியாக வராது அதனால் கும்மிருட்டில்தான் பெரும்பாலும் தூக்கம்,அன்று வழக்கம் போல விளக்கை  அணைத்து விட்டு படுத்த பிறகுதான் கனவுகள் வர ஆரம்பித்தன. இது வரை பார்த்த அனைத்து பேய் படங்களும் கதைகளும் ஓடின அதில் நான் ஒரு   கதாபாத்திரமாய் வேறு வந்து தொலைத்தேன், பேய் கனவுகள் வருவது எனக்கு ஒன்றும் புதிது இல்லை அவ்வப்போது வரும் போகும் பிறகு தூங்கி எழுந்து பார்க்கும்போது சிரித்து கொள்வேன் அவ்வளவே, எதோ ஒரு பேயின் முதுகில் சவாரி செய்தேன் செய்தேன், எதோ ஒரு பேய் என்னை துரத்தியது ரத்தம் சொட்ட சொட்ட ஓடி வந்தது, தலை தெறிக்க ஓடினேன், அப்புறம் ஏதோ ஒரு கட்டி முடிக்காத கட்டிடத்தில் முடியை விரித்து போட்டு ஆங்கில பேய் படங்களில் வரும் ட்ரேட் மார்க் கவுன் அணிந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கையில் திடீரென என் வீட்டு காலியான வரவேற்பறை கடந்து மூடிய என் படுக்கை அறைக்குள் நான் அதே உடை அணிந்து அதே நிலையில் தூங்கி கொண்டிருக்கின்றேன். ஒரு காய் நீண்டு என் கழுத்தை சுற்றி வளைக்கின்றது நான் திடிக்கிட்டு விழித்து பார்க்கையில் என்  தலைக்கு மேல ஒரு கருப்பு தலை நான்கு அடி நீள கூந்தல்  என் தலையணை தாண்டி விரிந்து கிடக்கிறது. என்னை அறியாமல் நான் யாருன்னு பயத்தில் கேக்க,, "நான்தான்ன்னன்" அப்படின்னு ஒரு பெண் அசிரீரி குரலில் சொல்லிவிட்டு என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்து விட்டது.. என் கண்கள் திறந்திருக்க வாய் காப்பாற்றுங்கள் என்று கத்த சத்தமே வரவில்லை கை கால்களை அசைக்க முடியவில்லை துடித்து கொண்டிருக்கையில் தூக்கம் கலைந்து பார்க்கையில் அதே இடத்தில் கழுத்தில் கை வைத்து கொண்டு நான் படுத்திருக்க நாவும் தொண்டையும் வறண்டு போய்.. வந்தது கனவா இல்லை உண்மையாக நடந்ததா என குழம்பி பொய் நேராக சாமி அறை சென்று விபூதி பட்டை அடித்து விட்டு வந்து என் படுக்கை அறையில் அமர்ந்தேன்.. மணி பார்த்தேன் அதிகாலை 4 மணி,  மனதை தேற்ற பாட்டு கேக்கலாமா என்று யோசித்தேன் பிறகுதான் பார்த்த பேய் படங்கள் அனைத்தும் நியாபகம் வந்தது போற பேய நாமலே ஏன் பாட்டு போட்டு வர வைக்கனும் என்று அப்படியே தூங்கலாம் என்று தலையணையில் சாய்ந்தேன், கண் மூடி படுத்தேன் மறுபடியும் யாரோ என் முதுகில் கை வைத்தது போல ஒரு உணர்வு அவ்வளவுதான் சடாரென்று எழுந்து உட்காந்திருந்தேன்.. இவ்வளவு நடந்த பின்னரும் எவனுக்கு தூக்கம் வரும்.. அவ்வளவுதான் அப்படியே மடி கணினியை விரித்து வைத்து அலுவலக பணியை செய்ய துவங்கி அதிலேயே மூழ்கியும் போனேன். 

காலையில் எழுந்த உடனே முதல் வேலையாக எனது அறையை சுத்தம் செய்தேன்.அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர ஒரு வாரம் ஆனது. 


பின்பு இணையத்தில் செய்த ஆய்வில் அது துயில் வாதம் (sleep paralysis) என்றும் ஒரு வகை புவிஈர்ப்பால் வருவது என்றும் தெரிந்தது, அறிவியலில் ஆயிரம் விளக்கம் குடுத்தாலும்.. அனுபவிக்கையில் மரண பீதி அடையும் நமக்கும்தான் தெரியும்.. 

இப்போவும் நான் தைரியசாலிதான்! ஆனால் பேய் படங்கள் பார்ப்பதற்கு முன் அறையை சுத்தம் செய்ய பழகி கொண்டேன்.... !

பயந்த சாமானியன் மனோஜ் (எ) தைரியசாலி

Friday, February 6, 2015

அழியும் பேருயிர்


சென்ற ஆண்டு வரை யானைகளை பற்றி பெரிதாக தெரிந்து கொண்டதுமில்லை வாய்ப்பும் அமைந்தது இல்லை, சென்ற ஒரு வருடத்தில் மட்டும் சென்னை ட்ரெக்கிங் கிளப் பல விடயங்களை எனக்கு சொல்லி குடுத்தது, ஒவ்வொரு துறையிலும் அறிவாளிகளை சந்தித்து கலந்துரையாடும்போதுதான் கற்றது கை மண் அளவு என்று எனக்கு நானே தனியாய் குட்டி கொள்கின்றேன், முதன் முறையாக CTC உடன் சென்ற ஒரு நிகழ்வில்தான் ஷ்யாம் துரைராஜ் என்னும் நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, சிறந்த புகைப்பட கலைஞர் எங்க எல்லாருக்கும் அவர்தான் குரு, நிறைய காடு மலைகள் நல்ல புகைப்படங்கள் ஏறி எறங்கி எக்கச்சக்கத்திற்கும் அறிவை வளர்ந்து வைத்திருப்பவர், எஸ் யு வி காரில் மூணாரில் இருந்து வந்து கொண்டிருக்கும்போது யானைகளை பற்றி பேச்சு வந்தது, அவர் அனுபவங்களையும் மக்களின் வன விலங்கு அறியாமை பற்றிய அங்கலாய்ப்பையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டு வந்தார், கோவில்களில் கட்டி வைத்து காசு குடுத்து ஆசீர்வாதம் வாங்கி பழகி விட்டதால் மக்களுக்கு காட்டு யானைக்கும் வளர்ப்பு யானைக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விட்டது என்று அவர் அனுபவத்தில்  கண்ட ஒரு விசயத்தை பகிர்ந்தார்.

ஒரு  காட்டை  ஒட்டிய சாலையில் சென்றபொழுது ஒரு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றுள்ளது, சற்றே உற்று கவனித்தால் சிறிது தூரத்தில் ஒரு பெரிய ஆண் காட்டானை சாலையை கடக்க  முயற்சித்து கொண்டிருந்தது ஒரு கல்யாண கோஷ்டி வாகனம் யானை கடக்கும் இடம் அருகில் நின்று குடும்பத்துடன் யானையை அலைபேசியில் பதிவு செய்து கொண்டு இருந்தார்கள் போல, அந்த யானைக்கு இவர்களை கண்டு பயம் அதனால் சாலையை கடக்காமல் தயங்கியபடியே நின்றுள்ளது, அது தற்காப்புக்காகவோ இல்ல எதோ ஒரு வேகத்தில் அது தாக்க துவங்கினால் அங்கு இருக்கும் கார்களும் வேன்களும் அதற்கு கால்பந்து போல்தான் என்பதை உணராத ஒரு மக்கள் கூட்டம், காட்டில் விலங்கிற்கு அவ்வளவுதான் தெரியும், நமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை அதன் வாழ்வு முறையை பொறுத்தவரை இப்படி இருப்பதுதான் அதன் இயல்பு. நல்ல வேலையாக அந்த வேன் பின்னாடி நின்ற கார் காரர் கொஞ்சம் புத்திசாலிதனமாக யோசித்து அந்த வேனை கடந்து சென்று பிண்டி வந்த வண்டிகளுக்கும்  வழி ஏற்படுத்தி சென்றுள்ளார் அத்துடன் அந்த குடும்பத்தினரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளார், பின்பு அனைத்து வண்டிகளும் மெதுவாக நகர்ந்து செல்லும்போது பார்த்தால் அந்த பெரிய யானைக்கு பின்னால் ஒரு யானை கூட்டமே நின்று கொண்டிருக்கிறது.. மிக சாதாரணமாக தெரியும் இந்த சம்பவத்திற்கு பின்பு மயிர் கூச்செறியும் ஒரு அனுபவமும் காட்டு விலங்கை பற்றிய அறியாமையும் ஒரு சேர விளங்கும். பிறகு இன்னும் சில விசயங்களையும் அவர் சொல்லி கொண்டே வந்தார், அதை போல பல மடங்கு அனுபவத்தை எனக்கு இந்த அழியும் பேருயிர் புத்தகம் தந்தது எனலாம்,


எழுத்தாளர் பெரிய கோவகாரரும், பெரியார் பக்தரும் போல.. மரம் நடுபவர் முதல் மல்லாக்க படுப்பவன் வரை என எல்லாரையும் சாடி தள்ளி விட்டார் முதல் ஐந்து பக்கத்தின் முன்பாகவே. நமக்கு பெரியாரின் மேல் பெரிதாய் அபிப்பிராயம் இல்லை இருந்தும் முழுதும் படிக்க துணிந்தேன் என் சகிப்பு தன்மையை எடை போட, ஆனால் உண்மையை கூற வேண்டும் என்றால் அந்த இடத்தில் நிறுத்தியிருந்தால் நான் படித்த முட்டாளாய் போயிருப்பேன்!


முதல் சில பக்கங்களில் தகவல்களை விட ஆதங்கமும் அங்கலாய்ப்பும் மேலிட்டு காணப்பட்டது, உதாரணமாக புத்தகத்தில் இருந்த வரிகள் 


"புகழ்பெற்ற வாரப்பத்திரிக்கை ஒன்று 'வழித்தடங்கள், மனிதருடனான மோதல், விபத்து' ஆகியன குறித்து ஒரு பெரிய கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய இந்நூலின் முதல் பதிப்பு குறித்தோ அதன் ஆசிரியர்கள் குறித்தோ செய்தியாக கூட ஒரு வரி இல்லை. அடுத்து, சென்ற இரண்டாண்டுகளுக்கு முன் மேட்டுபாளையம் - வனக் கல்லூரியில் நடத்தப்பட்ட கோவையை சேர்ந்த ஒரு தன்னார்வ குழுவினரின் யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் நமது நூல் பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை"


சத்தியமாக ஆசிரியர் என் இந்த மாதிரி வரிகளை ஒரு சுற்று சூழல் புத்தகத்தில் சேர்த்தார் என புரிபடவில்லை, நான் பெரிய இவனுமில்லை இலக்கியவாதியும் இல்லை ஆனால் வாசகனாய் இது போன்ற விஷயங்கள் நெருடவே செய்கின்றன, 

சரி நல்ல பகுதிக்கு வந்த பின்பு சிறிதும் தொய்வில்லாமல் தகவல்களை வாரி வழங்குகின்றது இந்த நூல், நிறைய அதி நிறைய விடயங்கள் யானைகளை பற்றி தெரிந்து கொள்ள உதவியது, மத நிலை என்றால் என்ன மனிதனின் மத வெறிக்கும் அதற்கும் வேறுபாடு உண்டு என்பதாகட்டும் அதை பற்றிய நீண்ட விளக்கங்கள், யானையின் பரிணாம வளர்ச்சி,இனப்பெருக்க முறைகள், குட்டிகளின் காலம் என விரிவாக செல்லும் இந்த நூலின் சிறப்பம்சம் தமிழ் இலக்கியங்களின் யானை பற்றிய கூற்றையும் முடிந்த அளவு சிறப்பாகவே பதிவு செய்து வாய் பிளக்க வைக்கின்றார்.

தந்தம் இறைச்சி போன்றவைக்காகவும், சில பேரின் மூட நம்பிக்கைகளுக்காக யானைகள்  வேட்டையாடப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே. கென்யா  அதிபர் அராப் மாய் பற்றி இந்நூலின் வாயிலாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே, கள்ள சந்தையில் விற்கப்படுவதை தடுக்கவும் உலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பவும் சுமார் 12 டன் கொண்ட யானை தந்தங்களை தீயிலிட்டு கொளுத்தினார்யானைகளின் அட்டகாசம் கும்மாளம் விவசாயிகள் கஷ்டம் என்ற செய்திகளை எல்லாம் அறவே வெறுக்க செய்தது இந்த நூல், காட்டை சுருக்கி நாட்டை பெருக்கி அந்த பெரும் உயிரை சிறு கூட்டுக்குள் அடைத்து அதன் மீதே பழி போடும் ரெண்டு கால் மிருகங்களான மனிதராதால்தான் இவ்வளவு இடையூறும் என்று நினைத்தால் வருத்தமாய்தான் உள்ளது, இதை ஒற்று கொள்ள மறுப்பவர்கள் ஒரு எண்பது நபர்களை எட்டுக்கு  பத்து அறையில் அடைத்து ஒரு பத்து நாட்கள் வாழவிட்டால் அந்த யானையின் கஷ்டம் தெரியும் என்றே நினைக்கின்றேன்.

அதிர்ச்சி தரும் விதமாக இந்த புத்தகத்தில் அதிகம் இயற்கையை பேணும் கேரளாவில்தான் யானைகள் அதிகம் கொல்லப்படுவதாக கூறுகின்றது, இதை உறுதி செய்து கொள்ள ஆவணங்களை தேடி கொண்டிருக்கிறேன். சமீப காலமாக இந்தியாவின் யானையின் எண்ணிக்கை சீராக உயர்ந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரமும் புத்தகத்தில் உள்ளது சிறிது ஆதரவு தரும் வகையில் உள்ளது. ஆனாலும் கேரளாவில் 4 பெண் யானைக்கு 1 ஆண் யானை மட்டும் இருக்கும் விகிதம் கவலையே தரும்.இப்பொழுது சீமை கருவேல மரம் என்ற புதிய காரணியும் சேர்ந்து கொண்டது யானைகளை அழிக்க,  இப்படியே போனால் மிருககாட்சி சாலையில் வைக்க கூட வனவிலங்குகள் பிழைத்திருக்க போவதுமில்லை! செத்த காலேஜில்தான் பாடம் செய்த விலங்குகளை படிக்க போகின்றோம்!சாமனியன் மனோஜ்