Friday, February 6, 2015

அழியும் பேருயிர்


சென்ற ஆண்டு வரை யானைகளை பற்றி பெரிதாக தெரிந்து கொண்டதுமில்லை வாய்ப்பும் அமைந்தது இல்லை, சென்ற ஒரு வருடத்தில் மட்டும் சென்னை ட்ரெக்கிங் கிளப் பல விடயங்களை எனக்கு சொல்லி குடுத்தது, ஒவ்வொரு துறையிலும் அறிவாளிகளை சந்தித்து கலந்துரையாடும்போதுதான் கற்றது கை மண் அளவு என்று எனக்கு நானே தனியாய் குட்டி கொள்கின்றேன், முதன் முறையாக CTC உடன் சென்ற ஒரு நிகழ்வில்தான் ஷ்யாம் துரைராஜ் என்னும் நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, சிறந்த புகைப்பட கலைஞர் எங்க எல்லாருக்கும் அவர்தான் குரு, நிறைய காடு மலைகள் நல்ல புகைப்படங்கள் ஏறி எறங்கி எக்கச்சக்கத்திற்கும் அறிவை வளர்ந்து வைத்திருப்பவர், எஸ் யு வி காரில் மூணாரில் இருந்து வந்து கொண்டிருக்கும்போது யானைகளை பற்றி பேச்சு வந்தது, அவர் அனுபவங்களையும் மக்களின் வன விலங்கு அறியாமை பற்றிய அங்கலாய்ப்பையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டு வந்தார், கோவில்களில் கட்டி வைத்து காசு குடுத்து ஆசீர்வாதம் வாங்கி பழகி விட்டதால் மக்களுக்கு காட்டு யானைக்கும் வளர்ப்பு யானைக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விட்டது என்று அவர் அனுபவத்தில்  கண்ட ஒரு விசயத்தை பகிர்ந்தார்.

ஒரு  காட்டை  ஒட்டிய சாலையில் சென்றபொழுது ஒரு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றுள்ளது, சற்றே உற்று கவனித்தால் சிறிது தூரத்தில் ஒரு பெரிய ஆண் காட்டானை சாலையை கடக்க  முயற்சித்து கொண்டிருந்தது ஒரு கல்யாண கோஷ்டி வாகனம் யானை கடக்கும் இடம் அருகில் நின்று குடும்பத்துடன் யானையை அலைபேசியில் பதிவு செய்து கொண்டு இருந்தார்கள் போல, அந்த யானைக்கு இவர்களை கண்டு பயம் அதனால் சாலையை கடக்காமல் தயங்கியபடியே நின்றுள்ளது, அது தற்காப்புக்காகவோ இல்ல எதோ ஒரு வேகத்தில் அது தாக்க துவங்கினால் அங்கு இருக்கும் கார்களும் வேன்களும் அதற்கு கால்பந்து போல்தான் என்பதை உணராத ஒரு மக்கள் கூட்டம், காட்டில் விலங்கிற்கு அவ்வளவுதான் தெரியும், நமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை அதன் வாழ்வு முறையை பொறுத்தவரை இப்படி இருப்பதுதான் அதன் இயல்பு. நல்ல வேலையாக அந்த வேன் பின்னாடி நின்ற கார் காரர் கொஞ்சம் புத்திசாலிதனமாக யோசித்து அந்த வேனை கடந்து சென்று பிண்டி வந்த வண்டிகளுக்கும்  வழி ஏற்படுத்தி சென்றுள்ளார் அத்துடன் அந்த குடும்பத்தினரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளார், பின்பு அனைத்து வண்டிகளும் மெதுவாக நகர்ந்து செல்லும்போது பார்த்தால் அந்த பெரிய யானைக்கு பின்னால் ஒரு யானை கூட்டமே நின்று கொண்டிருக்கிறது.. மிக சாதாரணமாக தெரியும் இந்த சம்பவத்திற்கு பின்பு மயிர் கூச்செறியும் ஒரு அனுபவமும் காட்டு விலங்கை பற்றிய அறியாமையும் ஒரு சேர விளங்கும். பிறகு இன்னும் சில விசயங்களையும் அவர் சொல்லி கொண்டே வந்தார், அதை போல பல மடங்கு அனுபவத்தை எனக்கு இந்த அழியும் பேருயிர் புத்தகம் தந்தது எனலாம்,


எழுத்தாளர் பெரிய கோவகாரரும், பெரியார் பக்தரும் போல.. மரம் நடுபவர் முதல் மல்லாக்க படுப்பவன் வரை என எல்லாரையும் சாடி தள்ளி விட்டார் முதல் ஐந்து பக்கத்தின் முன்பாகவே. நமக்கு பெரியாரின் மேல் பெரிதாய் அபிப்பிராயம் இல்லை இருந்தும் முழுதும் படிக்க துணிந்தேன் என் சகிப்பு தன்மையை எடை போட, ஆனால் உண்மையை கூற வேண்டும் என்றால் அந்த இடத்தில் நிறுத்தியிருந்தால் நான் படித்த முட்டாளாய் போயிருப்பேன்!


முதல் சில பக்கங்களில் தகவல்களை விட ஆதங்கமும் அங்கலாய்ப்பும் மேலிட்டு காணப்பட்டது, உதாரணமாக புத்தகத்தில் இருந்த வரிகள் 


"புகழ்பெற்ற வாரப்பத்திரிக்கை ஒன்று 'வழித்தடங்கள், மனிதருடனான மோதல், விபத்து' ஆகியன குறித்து ஒரு பெரிய கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய இந்நூலின் முதல் பதிப்பு குறித்தோ அதன் ஆசிரியர்கள் குறித்தோ செய்தியாக கூட ஒரு வரி இல்லை. அடுத்து, சென்ற இரண்டாண்டுகளுக்கு முன் மேட்டுபாளையம் - வனக் கல்லூரியில் நடத்தப்பட்ட கோவையை சேர்ந்த ஒரு தன்னார்வ குழுவினரின் யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் நமது நூல் பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை"


சத்தியமாக ஆசிரியர் என் இந்த மாதிரி வரிகளை ஒரு சுற்று சூழல் புத்தகத்தில் சேர்த்தார் என புரிபடவில்லை, நான் பெரிய இவனுமில்லை இலக்கியவாதியும் இல்லை ஆனால் வாசகனாய் இது போன்ற விஷயங்கள் நெருடவே செய்கின்றன, 

சரி நல்ல பகுதிக்கு வந்த பின்பு சிறிதும் தொய்வில்லாமல் தகவல்களை வாரி வழங்குகின்றது இந்த நூல், நிறைய அதி நிறைய விடயங்கள் யானைகளை பற்றி தெரிந்து கொள்ள உதவியது, மத நிலை என்றால் என்ன மனிதனின் மத வெறிக்கும் அதற்கும் வேறுபாடு உண்டு என்பதாகட்டும் அதை பற்றிய நீண்ட விளக்கங்கள், யானையின் பரிணாம வளர்ச்சி,இனப்பெருக்க முறைகள், குட்டிகளின் காலம் என விரிவாக செல்லும் இந்த நூலின் சிறப்பம்சம் தமிழ் இலக்கியங்களின் யானை பற்றிய கூற்றையும் முடிந்த அளவு சிறப்பாகவே பதிவு செய்து வாய் பிளக்க வைக்கின்றார்.

தந்தம் இறைச்சி போன்றவைக்காகவும், சில பேரின் மூட நம்பிக்கைகளுக்காக யானைகள்  வேட்டையாடப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே. கென்யா  அதிபர் அராப் மாய் பற்றி இந்நூலின் வாயிலாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே, கள்ள சந்தையில் விற்கப்படுவதை தடுக்கவும் உலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பவும் சுமார் 12 டன் கொண்ட யானை தந்தங்களை தீயிலிட்டு கொளுத்தினார்யானைகளின் அட்டகாசம் கும்மாளம் விவசாயிகள் கஷ்டம் என்ற செய்திகளை எல்லாம் அறவே வெறுக்க செய்தது இந்த நூல், காட்டை சுருக்கி நாட்டை பெருக்கி அந்த பெரும் உயிரை சிறு கூட்டுக்குள் அடைத்து அதன் மீதே பழி போடும் ரெண்டு கால் மிருகங்களான மனிதராதால்தான் இவ்வளவு இடையூறும் என்று நினைத்தால் வருத்தமாய்தான் உள்ளது, இதை ஒற்று கொள்ள மறுப்பவர்கள் ஒரு எண்பது நபர்களை எட்டுக்கு  பத்து அறையில் அடைத்து ஒரு பத்து நாட்கள் வாழவிட்டால் அந்த யானையின் கஷ்டம் தெரியும் என்றே நினைக்கின்றேன்.

அதிர்ச்சி தரும் விதமாக இந்த புத்தகத்தில் அதிகம் இயற்கையை பேணும் கேரளாவில்தான் யானைகள் அதிகம் கொல்லப்படுவதாக கூறுகின்றது, இதை உறுதி செய்து கொள்ள ஆவணங்களை தேடி கொண்டிருக்கிறேன். சமீப காலமாக இந்தியாவின் யானையின் எண்ணிக்கை சீராக உயர்ந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரமும் புத்தகத்தில் உள்ளது சிறிது ஆதரவு தரும் வகையில் உள்ளது. ஆனாலும் கேரளாவில் 4 பெண் யானைக்கு 1 ஆண் யானை மட்டும் இருக்கும் விகிதம் கவலையே தரும்.இப்பொழுது சீமை கருவேல மரம் என்ற புதிய காரணியும் சேர்ந்து கொண்டது யானைகளை அழிக்க,  இப்படியே போனால் மிருககாட்சி சாலையில் வைக்க கூட வனவிலங்குகள் பிழைத்திருக்க போவதுமில்லை! செத்த காலேஜில்தான் பாடம் செய்த விலங்குகளை படிக்க போகின்றோம்!சாமனியன் மனோஜ்